அறிவியல் துணுக்குகள் பகுதி-2

வெள்ளிக் கிரகம்

வெள்ளிக் கிரகம்  (venus) ஒரு முறை சுழல 243 நாட்கள் பிடிக்கும். ஆனால், அது சூரியனைச் சுற்றி வர 225 நாட்களே பிடிக்கும். அதாவது, வெள்ளிக் கிரகத்தில் ஒரு ஆண்டு பூமியின் 225 நாட்கள். மேலும், பூமி சுழல்வதைக் காட்டிலும், வெள்ளி எதிர் திசையில் சுழலும். அதாவது நாம் வெள்ளிக் கிரகத்தில் இருந்தோமானால், சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும். புதன், செவ்வாய் கிரகங்களைப் போலன்றி, பூமி போல், வெள்ளிக் கிரகத்திலும் காற்று மண்டலம் உள்ளது. அதில் 96% கரிம வாயு. இவ்வாயு கடும் பசுமைக்குடில் விளைவைக் கொண்டுள்ளதால், வெள்ளிக் கிரகம் மிகவும் வெப்பம் வாய்ந்ததாகும். அதன் பரப்பில் 450 C க்கும் அதிகமான வெப்பம் நிலவுகிறது. பூமியின் பெரும்பான்மையான கரிம வாயு கடல்களில் முடங்கி கிடக்கிறது. ஆனால் மனிதர்களின் எரிபொருள் பயன்பாட்டால், பெருமளவில் கரிம வாயு வெளியாகி, பூமியும் அதிக வெப்பம் அடைந்து கொண்டு வருகிறது. பூமி வெள்ளிக் கிரகம் போன்ற நரகமாக மாறாதிருப்பது, மனிதர் கையிலேயே உள்ளது.  

___________________________________________________________________________________ 

ஒளி வேகமும் காலச் சுருக்கமும்

சார்பியல் (relativity) இன் படி, வேகமாக செல்பவருக்கு காலம் மெதுவாகக் கடக்கும். எ. கா. டிற்கு, சூரியனுக்கு அதி அருகாமையில் உள்ள விண்மீனான ஆல்பா செண்டாரிக்கு  ஒளி வேகத்தில் செல்ல நான்கு ஆண்டுகள் பிடிக்கும். சார்பியலின் படி ஒளி வேகத்தில் எப்பொருளும் செல்ல முடியாது. அதை விட குறைவான வேகத்திலேயே பயணிக்க வேண்டும். அது வேறு கதை. பூமியிலிருந்து அதி வேகத்தில் பயணிக்கும் விண்கலத்தில் செந்தில் என்ற மனிதரை அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அந்த விண்கலம் ஒளி வேகத்தில் பாதி அளவில் பயணிப்பதாக  வைத்துக் கொள்வோம். நாம் பூமியில் இருந்து காணும் பொழுது, செந்தில் ஆல்பா செண்டாரியை சென்றடைய 8 ஆண்டுகள் பிடித்திருக்கும். ஆனால் செந்திலுக்கு 7 ஆண்டுகள் தான் கடந்திருக்கும்! ஒளி வேகத்தில் 75% வேகத்தில் செந்தில் பயணித்தாரானால், பூமியில் இருந்து காணும் நமக்கு அவர் 6 ஆண்டுகள் கழித்து ஆல்பா செண்டாரி பொய் சேருவார். ஆனால் அவருக்கு 4 ஆண்டுகள் தான் கடந்திருக்கும்! இது வெறும் உளவியல் ரீதியான காலம் மட்டும் அல்ல. செந்தில் பூமியில் வாழ்ந்திருந்தால் அவருக்கு 6 வயது கூடியிருக்கும். அதி வேகத்தில் பயணித்ததின் காரணமாக, அவருக்கு 4 வயதே கூடியது. இது போன்ற சார்பியல் கணக்கின் படி, ஒளி வேகத்தில் 99.999999999% (புள்ளிக்கு அடுத்து  ஒன்பது ஒன்பதுகள்) வேகத்தில் செந்தில் பயணிப்பாரானால், நம் பார்வையில் செந்தில் ஆல்பா செண்டாரி போய் சேர 4 ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் அவருக்கோ வெறும் 9 நிமிடங்களே ஆகி இருக்கும்! ஆக அதிவேகத்தில் பயணிப்பதில் மூலம், காலத்தின் போக்கை நம்மால் நிதானிக்க இயலும். இது வெறும் கோட்பாடு மட்டும் அல்ல, செய் முறையில் நிரூபிக்கப் பட்ட உண்மையாகும்.

___________________________________________________________________________________ 

2023 மருத்துவத் துறை நொபெல் பரிசு

இந்த வருட மருத்துவத் துறைக்கான நொபெல் பரிசு கோவிட் தடுப்பு மருந்தை உருவாக்கப் பயன் படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை கண்டறிந்தவர்களுக்கு தரப்பட்டது. பெரியம்மைக்கான (small pox) தடுப்பூசியில் தொடங்கி, இருநூறு ஆண்டுகளாக தடுப்பூச்சிகள் வழங்கப் படினும், தடுப்பு மருந்து தொழில்நுட்பம் அடிப்படையில் மாறாமல் இருந்தது. முதலில் இந்த அடிப்படையை புரிந்து கொள்வோம். வைரஸ் அணுவின் மேற்பரப்பில் காம்புகள் (spikes) இருக்கும். இந்தக் காம்புகள் சாவி போன்ற நுண்ணமைப்புக்களைக் கொண்டிருக்கும். சாவி பூட்டில் பொருந்துவது போல், இக்காம்புகள் நம் உயிரணுக்களின் துவாரங்களில் பொருந்தி டி.என்.ஏ வைச் செலுத்தி வைரஸ் வாரிசுகளை உருவாக்கும். இவ்விதமாய் வைரஸ் பெருக நமக்கும்  நோய் ஏற்படுகிறது. இயற்கையாகவே வைரஸ்களை ஒழிக்க, நாம் இரத்தத்தில் எதிர்ப்பு அணுக்கள் உள்ளன. இவை வைரஸ் காம்பின் நுண்ணமைப்புக்களுக்கு ஏற்ப நுண்கவசங்களை (antibodies) உற்பத்தி செய்யும். அவை வைரஸின் காம்புகளில் ஒட்டிக்கொண்டு அவற்றை செயலிழக்கச் செய்யும். ஒரே குறை என்னவென்றால், இந்த நுண்கவசங்கள் உருவாக அதிக நாட்கள் பிடடிக்கையில், வைரஸ் உடலில் பன்மடங்கு பெருகி உயிரையே குடித்து விடுகிறது.

அடிப்படை தடுப்பு மருந்து தொழில்நுட்பம் என்னவென்றால் செயலிழந்த வைரஸை நோய் ஏற்படுவதற்கு முன்பே உடலில் செலுத்துவதே ஆகும். இதை உண்மை வைரஸ் என்று நம்பி, நம் எதிர்ப்பணுக்கள் நுண்கவசங்களை உருவாக்க, உண்மை வைரஸ் வருவதற்கு முன்பே நம் உடல் தயாராகி விடும். நொபெல் பரிசு வென்ற எம்.ஆர்.என்.எ என்கிற தொழில்நுட்பம் செயலிழந்த வைரஸ்களை அல்லாமல், அந்த வைரஸ் காம்புகளை நம் இரத்தத்திலேயே உருவாக்கும் வழிவகையைக் கொண்டிருக்கும். ஒரு விதத்தில் இதை உயிரியல் மென்பொருள் (biological software ) எனலாம். இந்த எம்.ஆர்.என்.எ தடுப்பு மருந்து நம் அணுக்களுக்கு கட்டளைகளைச் செலுத்த, வைரஸ் காம்புகள் உருவாகி அவற்றை முறியடிக்கும் நுண் கவசங்களும் உருவாகி விடுகிறது. இந்த எம்.ஆர்.என்.எ தடுப்பு மருந்தினால் ஒரு முக்கிய லாபம் உள்ளது. அடிப்படை தொழில்நுட்பத்தின் இயக்கம் எளிதாயினும், செயலிழந்த வைரஸ்களை உருவாக்குவது கடினம். பல ஆண்டு காலம் பிடிக்கலாம். ஆனால் எம்.ஆர்.என்.எ தடுப்பை சில மாதங்களில் உருவாக்கலாம். கோவிட் நோயினால் மாக்கள் மாண்டு கொண்டிருக்க, கால தாமதம் நல்லதன்று. குறுகிய காலத்தில் எம்.ஆர்.என்.எ தொழில்நுட்பம் மூலம் கொவிட் தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டதால், பல இலட்சம் உயிர்கள் காக்கப்பட்டன. இத்தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்கள், நோபெல் பரிசு பெற மிகவும் தகுதியானவர்களே!

___________________________________________________________________________________ 

நம்மைச் சூரியனிடமிருந்து காக்கும் பூமியின் கரு

பூமியின் கரு நம்மை சூரியனிடமிருந்து காப்பாற்றுகிறது! பூமியின் கருவுக்கும் சூரியனுக்கும் என்ன சம்மந்தம்? கோடையின் கொளுத்தும் வெயில் போக சூரியன் அத்தனை கொடியதா என்ன? உண்மையில் ஆம்! சூரியன் நமக்கு அணுப்பிணைப்பு மூலம் ஆற்றல் அளிப்பினும், அவ்வப்போது  அதிக ஆற்றல் கொண்ட மின்னூட்டம் கொண்ட துகள்களை பெருமளவில் வீசி எறிகிறது. இவை கதிர்வீச்சு போன்ற நச்சுத்தன்மை கொண்டது மட்டுமன்றி அதி வேகத்தில் சீறிப் பாய்ந்து வருவதால் பூமியின் காற்று மண்டலத்தையே வாரிப் போய்விடக் கூடும். பின்பு செவ்வாய் கிரகம் போல் பூமியும் கடலற்ற, பசுமையற்ற தரிசு நிலமாகத்தான்  இருந்திருக்கும். ஆனால் பூமியை இக்கொடுமையினின்று காப்பது அதன் காந்தப்புலமாகும். அந்த காந்தப்புலத்தை உருவாக்குவது பூமியின் உருக்கிய இரும்புக் கருவாகும்.  திரவ இரும்பு பூமியின் சுற்றலால், அதுவும் சுழன்று பாய்ந்து பெரும் மின்னோட்டத்தை ஏற்படுத்துகிறது. மின்னோட்டம் காந்தப்புலத்தை விளைவிக்கிறது. இவ்வாறாய் விளைந்த பூமியின் காந்தப்புலம் கதிர்வீச்சுக் காற்றைத்  தகர்க்கும் ஓர் கவசம் போல் அமைகிறது. 

___________________________________________________________________________________ 

Comments